கிரிக்கெட்

ஐ.சி.சி. விருதின் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்த சஞ்சு சாம்சன்..வேறு யாருக்கெல்லாம் இடம்..?

சஞ்சு சாம்சன், இந்தியாவின் கடைசி இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார்.

புதுடெல்லி,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இதன்படி சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப்போட்டியில் இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி ஆமதாபாத்தில் வருகிற 8-ந்தேதி (ஞாயிறு) நடைபெறுகிறது.

இதனிடையே நடப்பு டி20 உலகக்கோப்பை போட்டியின் இறுதிக் கட்டத்தில் அருமையான இன்னிங்ஸ்களுடன் உயர்ந்திருக்கும் இந்திய பேட்டர் சஞ்சு சாம்சன் ஆவார்.

தொடக்கத்தில் தகுந்த பார்மை எட்ட முடியாமல் தடுமாறி வந்த சாம்சன், இந்திய அணியில் தனக்கான இடத்தை இழந்திருந்தார். உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பிடித்தபோதும், இந்தியா முதலில் விளையாடிய 6 ஆட்டங்களில் 2-இல் மட்டுமே களமிறக்கப்பட்டார். அதிலும் 22, 24 ரன்களுடன் வெளியேறினார்.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான காலிறுதிக்கு நிகரான ஆட்டத்தில் 97 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய சாம்சன், பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 89 ரன்கள் அடித்து மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்தார். வலது கை வீரரான இவர் இந்தியாவின் கடைசி இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார்.

இந்த நிலையில், நடந்து வரும் டி20உலகக்கோப்பை போட்டியின் சிறந்த வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அவர்கள் போட்டியின் சிறந்த வீரர்களுக்கான இறுதிப் பட்டியலில் சஞ்சு சாம்சன் இடம்பிடித்துள்ளனர்.

இதன்படி 8 சிறந்த வீரர்களுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களில் சஞ்சு சாம்சன் (இந்தியா), வில் ஜாக்ஸ் (இங்கிலாந்து), சாஹிப்சாடா பர்ஹான் (பாகிஸ்தான்), லுங்கி நிகிடி (தென் ஆப்பிரிக்கா), ஐடன் மார்க்ராம் (தென் ஆப்பிரிக்கா), ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து), ஷாட்லி வான் ஷால்க்விக் (அமெரிக்கா), டிம் சீபர்ட் (நியூசிலாந்து) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விக்கெட் கீப்பர், பேட்டரான சஞ்சு சாம்சன் நான்கு போட்டிகளில், 77.33 சராசரி மற்றும் 201.73 ஸ்ட்ரைக் ரேட்டில் 232 ரன்கள் எடுத்தார்.

இதேபோல இங்கிலாந்தின் வில் ஜாக்ஸ், இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான முக்கியமான சூப்பர் 8 சுற்று உட்பட நான்கு ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார்.