சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள கேரள அணியின் கேப்டனாக இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தத் தொடரில் கேரள அணியை அவர் வழிநடத்த உள்ளார்.
இதற்கான 18 பேர் கொண்ட அணியை கேரள கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வரும் சஞ்சு சாம்சன், தற்போது கிடைத்துள்ள ஓய்வு காலத்தைப் பயன்படுத்தி தனது மாநில அணிக்காக விளையாட உள்ளார். கடந்த முறை நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரிலும் கேரள அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர், இந்த முறையும் அணியை வழிநடத்த உள்ளார். கடந்த தொடரில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 233 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்த முறை கேரள அணியில் சஞ்சு சாம்சனுடன் ரோகன் குன்னுமல், முகமது அசாருதீன், விஷ்ணு வினோத், சல்மான் நிசார், அஹமது இம்ரான், கோவிந்த் தேவ் பாய் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் கொண்ட விக்னேஷ் புத்தூர் மற்றும் கே.எம். ஆசிப் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர். அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஜலஜ் சக்சேனாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கேரள அணி எலைட் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, திரிபுரா, புதுச்சேரி, அசாம் மற்றும் இமாச்சலப் பிரதேச அணிகளும் இடம்பெற்றுள்ளன.