கிரிக்கெட்

எனது மனைவி அழுதுகொண்டிருந்தார்; முதலில் எனக்கு ஆதரவாகப் பேசியவர் கவுதம் கம்பீர்" – சர்பராஸ் கான் உருக்கம்

எனது மனைவியும் அழுதுகொண்டிருந்தார்.

இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூம் தகவல்களை வெளியே கசியவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டால் தானும் தனது குடும்பத்தினரும் மிகுந்த மனவேதனை அடைந்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான் தெரிவித்துள்ளார். 2024-25-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின்போது இந்திய அணியின் ஓய்வறையில் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட கருத்து வேறுபாடுகள் தொடர்பான தகவல்கள் வெளியே கசிந்த விவகாரத்தில் சர்பராஸ் கான் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போது ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அவர், ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை. இந்த விவகாரம் குறித்து பேட்டியில் மனம் திறந்துள்ளார்.

சர்பராஸ் கான்

இதுகுறித்து சர்பராஸ் கூறுகையில், "இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியானபோது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. பார்டர் – கவாஸ்கர் தொடர் முடிந்து 20 முதல் 25 நாட்கள் ஆகியிருந்தன. அந்தத் தொடரின்போது எனக்குக் காயம் ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது திடீரென டிரஸ்ஸிங் ரூம் தகவல்களை வெளியே கசியவிட்டதாக செய்திகள் பரவத் தொடங்கின. விமானத்தில் இருந்து இறங்கியவுடன் எனக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் வந்தன. யாரிடம் இதுகுறித்துப் பேசுவது என்றே தெரியவில்லை. ஒரு கட்டத்தில் தொடர்ந்து வந்த அழைப்புகளால் எனது செல்போனை அணைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது" என்றார்.

மேலும், இந்த விவகாரம் தனது குடும்பத்தினரை மிகவும் பாதித்ததாகக் குறிப்பிட்ட அவர், "எனது தந்தை மிகவும் வருத்தப்பட்டார். எனது மனைவியும் அழுதுகொண்டிருந்தார். என்னால் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க முடியும். ஆனால் எனது தந்தை, தாய், சகோதரர் மற்றும் மனைவி ஆகியோர் பாதிக்கப்பட்டதைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருந்தது. சமூக வலைதளங்களில் ஒரு சிறிய விஷயத்தைக்கூட பெரிதுபடுத்தி விடுகிறார்கள். ஒருவரது செயல்பாட்டை பாதிக்க முடியாவிட்டால், அவரது பெயரைக் கெடுக்க முயற்சிப்பார்கள் என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இதுபோன்ற ஒன்றுதான் நடந்தது" என்று தெரிவித்தார்.

கவுதம் கம்பீர்

இந்த இக்கட்டான நேரத்தில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனக்கு ஆதரவாக இருந்ததாகவும் சர்பராஸ் கூறினார். "நான் செல்போனை அணைத்திருந்த நிலையில் கவுதம் கம்பீர் சார் எனக்கு இரண்டு முறை அழைப்பு விடுத்தார். தேவையற்ற பேச்சுகளிலும் அரசியலிலும் தலையிட வேண்டாம். உனது கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்து என்று அறிவுரை கூறினார். அதற்கு நான், எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை; ஆனால் எனது தந்தை மிகவும் வருத்தமாக இருக்கிறார், எனது மனைவியும் அழுதுகொண்டிருக்கிறார் என்று தெரிவித்தேன். உடனே கம்பீர் சார் எனது தந்தையிடம் பேசினார்.

இதுபோன்ற பேச்சுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். சர்பராஸ் நல்ல கிரிக்கெட் வீரர். அவர் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடட்டும். ஏதாவது உதவி தேவைப்பட்டால் என்னை அழைக்கலாம் என்றும் கூறினார். எனக்கு முதலில் அழைப்பு விடுத்து ஆதரவளித்தவர் கம்பீர் சார்தான்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும், தன் மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்த சர்பராஸ், "உண்மையிலேயே நான் டிரஸ்ஸிங் ரூம் தகவல்களை கசியவிட்டிருந்தால், அதன்பிறகு இந்தியா ஏ அணியிலும், இலங்கை தொடருக்கான இந்திய அணியிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்குமா? இந்தச் செய்திகளை யார் பரப்பினார்கள் என்பதும் எனக்குத் தெரியாது" என்று கேள்வி எழுப்பினார்.

SCROLL FOR NEXT