கிரிக்கெட்

2-வது டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம்

கே.எல்.ராகுல் 25 ரன்களில் வெளியேறினார்.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, டாம் பிளண்டெலின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 356 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அபாரமாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் பெரும் தடுமாற்றத்தைச் சந்தித்துள்ளது. கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 356 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இந்திய அணி

இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் எதுவும் எடுக்காமல் மேட் ஹென்றி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து தேவ்தத் படிக்கல் 20 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். கேப்டன் சுப்மன் கில் 17 ரன்களில் கைல் ஜேமிசன் பந்துவீச்சில் வெளியேறினார். இதனால் இந்திய அணி முக்கியமான விக்கெட்டுகளை விரைவாக இழந்து நெருக்கடிக்கு உள்ளானது.

பின்னர் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இணைந்து அணியைச் சரிவிலிருந்து மீட்க முயற்சித்தனர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். ஆனால் ஜேக்கப் டஃபி இந்த ஜோடியைப் பிரித்தார். ரிஷப் பண்ட் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து கே.எல்.ராகுல் 25 ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணியின் சரிவு மேலும் அதிகரித்தது.

தொடர்ந்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 60 பந்துகளைச் சந்தித்து 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் நாதன் ஸ்மித் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் துருவ் ஜூரெல் நிதானமாக விளையாடி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 46 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்திருந்தது. துருவ் ஜூரெல் 7 ரன்களுடனும், இந்திய அணி 240 ரன்கள் பின்தங்கிய நிலையிலும் இருந்தது. நியூசிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன், ஜேக்கப் டஃபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மேட் ஹென்றி, நாதன் ஸ்மித் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்

SCROLL FOR NEXT