கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான தொடர்: நியூசிலாந்து வீரர் விலகல்

சொந்த மண்ணில் நடைபெறும் சர்வதேசப் போட்டியில் விளையாட வேண்டும் என்ற அவரது எதிர்பார்ப்பும் தாமதமாகியுள்ளது.

ஆக்லாந்து,

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வில்லியம் ஓ ரூர்க், காயங்களிலிருந்து மீண்டு வருகிறார். இந்தியாவுக்கு எதிரான வரவிருக்கும் முழுத் தொடரிலும் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஓ’ரூர்க்கின் காயங்களைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. டிசம்பரில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு அவரை முழுமையாகத் தயார்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் அவர் இடம்பெற வாய்ப்பிருந்த நிலையில், விலகியுள்ளார். மேலும், ஏப்ரல் 2025-க்குப் பிறகு சொந்த மண்ணில் நடைபெறும் சர்வதேசப் போட்டியில் விளையாட வேண்டும் என்ற அவரது எதிர்பார்ப்பும் தாமதமாகியுள்ளது.

இது தொடர்பாக நியூசிலாந்து பயிற்சியாளர் ராப் வெல்டர் கூறியதாவது,

இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறவுள்ள மிக முக்கியமான தொடரில் வில் விளையாட முடியாமல் போனது நிச்சயமாக ஏமாற்றமளிக்கிறது,” என்று நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராப் வால்டர் தெரிவித்தார்.

வில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டு தொடர்களிலும் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தார். இருப்பினும், தொடர்ந்து ஆலோசனை நடத்திய பிறகு, அவருடைய இரு காயங்களிலிருந்தும் முழுமையாகக் குணமடையக் கூடுதல் கால அவகாசம் வழங்கவும், பந்துவீச்சுப் பயிற்சியின் சுமையைப் படிப்படியாகவும் பாதுகாப்பாகவும் அதிகரிக்கவும் முடிவு செய்தோம். அடுத்த சில மாதங்களில் எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும். எனவே, வில் மீண்டும் களமிறங்குவதற்கு முன்பு முழுமையான உடற்தகுதியைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், அவரது மீள்வருகையில் நாங்கள் மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.

SCROLL FOR NEXT