வங்கதேச கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக, தொடக்க வீரர் ஷத்மான் இஸ்லாம் கணுக்கால் காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சில்ஹெட்டில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது அவருக்கு இந்தக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முழுமையான மருத்துவ அறிக்கை கிடைத்த பின்னரே காயத்தின் தீவிரம் மற்றும் குணமடையும் காலம் உறுதியாகத் தெரியவரும்.
ஷத்மான் இஸ்லாமுக்கு மாற்றாக மைமென்சிங் அணியின் தொடக்க வீரர் மக்ஃபிசுல் இஸ்லாம் ராபினைத் தேர்வு செய்ய வங்கதேச அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் தற்போது சில்ஹெட்டில் வங்கதேச டெஸ்ட் அணியுடன் தங்கியிருந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தேசிய அணியின் பயிற்சியாளர்களுடன் இணைந்து வலைப்பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளதால், தென்னாப்பிரிக்க தொடருக்கான அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.