ஐதராபாத்,
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நேற்றிரவு அரங்கேறியது. 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்டுக்கு 247 ரன்கள் குவித்தது. ஷாய் ஹோப் 102 ரன்களுடனும் (50 பந்து, 4 பவுண்டரி, 9 சிக்சர்), ரூதர்போர்டு 49 ரன்களுடனும் (26 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர். பின்னர் 248 ரன் இலக்கை நோக்கி இந்திய அணி 19.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர் கீமோபால் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்த ஆட்டத்தில் 102 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப்புக்கு இது 3-வது சதமாகும். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் அதிக சதம் அடித்தவரான கிறிஸ் கெய்ஸ், இவின் லீவிசை (தலா 2 சதம்) முந்தினார்.
தற்போதைய இந்திய சுற்றுப்பயணத்தில் ஹோப்பின் 4-வது சதமாகும். அவர் ஒரு நாள் தொடரில் 2 சதமும், 20 ஓவர் தொடரில் 2 சதமும் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.