ராஞ்சி,
இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 500-க்கும் மேற்பட்ட ரன்கள் குவிக்கப்பட்ட நிலையிலும், சிறப்பாக பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர் ரோஸ்டன் சேஸை வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் பாராட்டியுள்ளார்.
ராஞ்சியில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் குவித்தது.
இந்திய அணியின் அதிரடி பேட்டிங்குக்கு இடையே, வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் ரோஸ்டன் சேஸ் சிறப்பாகப் பந்துவீசினார். அவர் 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சிவம் துபே ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.
இதுகுறித்து போட்டிக்கு பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப், “அற்புதமான பந்துவீச்சு! இப்படிப்பட்ட ஆடுகளத்திலும் சிறிய மைதானத்திலும் ஓவருக்கு 6 ரன்களுக்கும் குறைவாக விட்டுக்கொடுப்பது நம்ப முடியாத ஒன்று.
பந்துவீச்சாளர்களுக்கு இது மிகவும் சவாலான சூழல். ஆனாலும், அவர் பந்துவீசி எங்களை போட்டியில் நிலைத்திருக்கச் செய்த விதம், பெரிய இலக்கை விரட்டிப் பிடிப்பதற்கு உதவியாக இருந்தது” என்றார்.
தொடர்ந்து 250 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, கேப்டன் ஷாய் ஹோப்பின் அதிரடியான ஆட்டத்தால் 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஷாய் ஹோப் 45 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷெர்பேன் ரூதர்போர்ட் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோரும் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.