புதுடெல்லி,
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு தகுதி பெறும்.
தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் பி பிரிவில் அங்கம் வகிக்கும் இலங்கை - ஓமன் அணிகள் மோதி வருகின்றன. பல்லெகல்லேவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரரகள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. குசல் மெண்டிசும், ரத்நாயகேவும் அதிரடி காட்டினர். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவரும் அரைசதம் கடந்தனர். குசல் மெண்டிஸ் 61 ரன்னிலும், ரத்நாயகே 60 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கடைசி கட்டத்தில் கேப்டன் ஷனகா அதிரடியில் மிரட்டினார். அவர் 19 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதத்தை எட்டினார். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. ஓமன் தரப்பில் வசிம் அலி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஓமன் அணி பேட்டிங் செய்ய உள்ளது.