கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார் ஷேன் டெய்ட்ஸ்

ஷேன் டெய்ட்ஸ் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த ஷேன் டெய்ட்ஸ் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் (CWI) இதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

ஷேன் டெய்ட்ஸ் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 2024 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் தொடர்ச்சியாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் அணியின் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பைகளில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்த அணியின் புதிய தரநிலையாக மாறியுள்ளதாக கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் இயக்குநர் மைல்ஸ் பாஸ்கோம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அணிக்காக டெய்ட்ஸ் வழங்கிய பங்களிப்புக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

ஆண்ட்ரே கோலே

இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸ் ஆண்கள் டெஸ்ட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான ஆண்ட்ரே கோலே, மகளிர் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான வரவிருக்கும் தொடரில் அவர் அணியின் பயிற்சிப் பொறுப்பை ஏற்க உள்ளார். ஏற்கனவே அணியில் பணியாற்றி வரும் பயிற்சியாளர்கள் மற்றும் உதவிப் பணியாளர்களுடன் இணைந்து அவர் செயல்படுவார்.

ஆண்ட்ரே கோலேவுக்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அமைப்பில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய அனுபவம் இருப்பதாக மைல்ஸ் பாஸ்கோம்ப் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, ஆண்கள் ஏ அணியுடனான அவரது அனுபவம் மகளிர் அணியின் அடுத்தகட்ட பயணத்திற்கு உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT