பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றது. இத்தொடரில் லீக் சுற்றின் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த இலங்கை, பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
லாகூரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷாஹீன் ஷா அப்ரிடி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது.
இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் அபாரமாக விளையாடி 128 பந்துகளில் 131 ரன்கள் குவித்தார். இதில் 12 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். அவிஷ்கா பெர்னாண்டோ 38 ரன்களும், பவன் ரத்நாயக்கே 65 பந்துகளில் 77 ரன்களும் எடுத்தனர். மேலும், தசுன் ஷனகா 17 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்தது.
கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மாஸ் சாதகத் 5 ரன்களிலும், நட்சத்திர வீரர் பாபர் அசாம் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் 14 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த பகர் ஜமான், சாட் பைக் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய பகர் ஜமான், 99 பந்துகளில் 127 ரன்கள் விளாசினார். இதில் 11 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.சாட் பைக் 75 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். இந்த இருவரின் சிறப்பான ஆட்டம் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளமாக அமைந்தது.
பின்னர் வந்த வீரர்களில் அராபத் மின்ஹாஸ் 31 பந்துகளில் 61 ரன்கள் விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். ஹசன் நவாஸ் 45 பந்துகளில் 37 ரன்களும், சல்மான் ஆகா 25 பந்துகளில் 17 ரன்களும் எடுத்தனர்.இறுதியில் பாகிஸ்தான் அணி 48.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.
தோல்வி தொடர்பாக பேசிய இலங்கை கேப்டன் குஷால் மெண்டிஸ்,
முதல் இரண்டு ஓவர்களில் நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடினோம். மதுஷங்கா பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டார். அதேபோல், கமிந்து பேட்டிங்கில் மிகச் சிறப்பாக விளையாடினார். அவரது பேட்டிங்கைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. இருப்பினும், நாங்கள் இன்னும் 25 முதல் 30 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும்.
உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், ஐந்தாவது பந்துவீச்சாளரைக் கொண்டு பந்துவீசுவது சற்று கடினமாக இருந்தது. ஏனெனில், மைதானத்தில் பனிப்பொழிவு அதிகரித்தது. மேலும், இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வதற்குச் சாதகமான சூழ்நிலையும் நிலவியது.
இருப்பினும், எங்களுடைய பந்துவீச்சுப் பிரிவு முதல் சில ஓவர்களில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, பவர்பிளே ஓவர்களில் எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தது. தில்ஷான் சிறப்பாகப் பந்துவீசினார். அதேபோல், துனித் பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டார்.
ஆனால், பீல்டிங்கில் நாங்கள் சில தவறுகளைச் செய்தோம். இதைத்தான் இனிவரும் போட்டிகளில் சரிசெய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். குறிப்பாக, பீல்டிங் துறையில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது.
இந்தத் தொடரில் எங்களுக்குப் பல சாதகமான விஷயங்கள் கிடைத்துள்ளன.
ஒரு கேப்டனாக, இந்தத் தொடர் முழுவதும் அணியின் செயல்பாட்டைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதே நேரத்தில், ஏற்கெனவே குறிப்பிட்ட சில துறைகளில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது.
பாகிஸ்தானில் விளையாடியது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அதேபோல், மீண்டும் இங்கிலாந்தில் விளையாடுவதற்கும் வீரர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இனிவரும் போட்டிகளை எதிர்கொள்ளும்போது, எங்களுடைய குறைகளைக் கண்டறிந்து சில முக்கியமான துறைகளில் முன்னேற்றம் காண வேண்டும்.. என தெரிவித்தார்.