கிரிக்கெட்

'இந்திய அணியின் பலமே இதுதான்'... பந்துவீச்சாளர்களுக்கு ஸ்ரேயாஸ் புகழாரம்

இந்தியா - நியூசிலாந்து தொடர் முழுவதும் ரசிகர்கள் அளித்த ஆதரவையும் ஸ்ரேயாஸ் பாராட்டினார்.

மவுண்ட் மாங்கனுய்,

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

பந்துவீச்சாளர்களுக்கு பாராட்டு

நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை 3-1 என கைப்பற்றியது.

இப்போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், “இந்தத் தொடர் முழுவதையும் பார்த்தால், இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான தொடராக இருக்கவில்லை. ஆனால், பந்துவீச்சாளர்கள் கிடைத்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்தினர். எந்தச் சூழலிலும் அணியை வெற்றிபெறச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டனர்.

அனைத்து வீரர்களிடமும் இருக்க வேண்டிய மனநிலையும், ஒவ்வொருவரிடமும் இருக்கும் தன்னம்பிக்கையும் மிகச் சிறப்பாக இருந்தன” என்றார்.

சவால்களை சமாளித்த இந்தியா

மேலும் , “வெவ்வேறு சூழல்கள், வானிலை மாற்றம் போன்ற சவால்களை சமாளித்து வெற்றியுடன் திரும்பியது மிகப்பெரிய விஷயம். இன்றைய ஆட்டத்திலும் பேட்டிங்கில் அதிக ரன்கள் எடுக்க முடியவில்லை. ஆனாலும், எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் இருந்தது. அனைத்து வீரர்களும் ஒரே எண்ணத்துடன் செயல்பட்டதால் எங்களது திட்டத்தை சரியாக செயல்படுத்த முடிந்தது.

அணியில் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்படும்போது, வீரர்கள் புதிய சூழலுக்குப் பழகுவதில் சிரமம் ஏற்படலாம். ஆனாலும், அதை நாங்கள் காரணமாகக் கூற விரும்பவில்லை. எங்கள் மீது வைக்கப்பட்ட எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்தினோம். ஒவ்வொரு வீரரும் தங்களால் முடிந்த சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினர்” என்றார்.

ரசிகர்களுக்கு நன்றி

இந்தியா - நியூசிலாந்து தொடர் முழுவதும் ரசிகர்கள் அளித்த ஆதரவையும் ஸ்ரேயாஸ் பாராட்டினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “போட்டியின் முடிவு எப்படியிருந்தாலும் ரசிகர்கள் தொடர்ந்து வந்து ஆதரவு அளித்தது மகிழ்ச்சியாக இருந்தது. சில நேரங்களில் இந்தியாவுக்கும், சில நேரங்களில் நியூசிலாந்துக்கும் சாதகமாக முடிவுகள் அமைந்தன. ஆனாலும் ரசிகர்கள் இரு அணிகளையும் உற்சாகப்படுத்தினர்.

இதுபோன்ற ஆதரவு எங்களுக்குத் தேவை. ரசிகர்களின் ஆதரவு விளையாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது. மைதானத்துக்கு வந்து எங்களுக்கு அன்பும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT