கொல்கத்தா,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற 60-வது லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சுடன் மோதியது.
அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் கொல்கத்தா அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். குறிப்பாக பின் ஆலன் குஜராத் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.
பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் 35 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ரகுவன்ஷி சிறப்பாக விளையாடினார். அவர் 82 ரன்கள் எடுத்தார். கேமரான் கிரீன் 52 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் சாய் கிஷோர் மற்றும் சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் சார்பில் சாய் சுதர்ஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் சாய் சுதர்ஷன் காயம் காரணமாக 23 (13) ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறக்கிய நிஷாந்த் சிந்து 1 ரன்னில் கேட்ச் ஆனார்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சுப்மன் கில், 33 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் அதிரடி காட்ட, அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. சிறப்பாக ஆடிய இந்த ஜோடியில் ஜோஸ் பட்லர் 32 பந்துகளில் அரை சதத்தை பதிவு செய்தார்.
இந்நிலையில் அதிரடி காட்டி வந்த கேப்டன் சுப்மன் கில் 85 (49) ரன்களில் கேட்ச் ஆனார். மீண்டும் களமிறங்கிய சாய் சுதர்ஷன், ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ரன்கள் குவித்து வந்த இந்த ஜோடியில் ஜோஸ் பட்லர் 57 (35) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடி காட்டி வந்த சாய் சுதர்ஷன் 27 பந்துகளில் தனது அரை சதத்தை எட்டினார். அடுத்து களமிறங்கிய தேவாட்டியா 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் சாய் சுதர்ஷன் 53 (28) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் சுனில் நரைன் இரண்டு விக்கெட்டுகளும், துபே மற்றும் கிரீன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றது.