கிரிக்கெட்

சதம் அடித்து விளாசல்: ஆட்ட நாயகன் விருது வாங்கிய சாஞ்சு சாம்சன் கூறியது என்ன?

54 பந்துகளில் 101 ரன்கள் விளாசிய சென்னை அணி வீரர் சஞ்சு சம்சன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

மும்பை,

ஐபிஎல் 2026 தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. 54 பந்துகளில் 101 ரன்கள் (10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) விளாசிய சென்னை அணி வீரர் சஞ்சு சம்சன் ஆட்ட நாயகன் விருதை வென்றார். பின்னர் பரிசளிப்பு விழாவில் சஞ்சு சாம்சன் கூறியதாவது:

சதம் அடித்தது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இது எனக்கும், அணிக்கும் ஒரு சிறப்பு தருணம். சமீபத்தில் நான் விஷயங்களை மிகவும் எளிமையாக வைத்திருக்கிறேன். பிட்சின் கண்டிஷன்களை பார்த்து விளையாடுகிறேன். இன்று பிட்ச்சை பார்த்தபோது இது வழக்கமான வான்கடே பிட்ச்சாக இல்லை. பந்து ஸ்விங் ஆனது, பந்து கொஞ்சம் நின்று சென்றது. அதைப் பார்த்து அணிக்கு என்ன தேவை என்று புரிந்துகொண்டேன் பவர்ப்ளே முடிந்தவுடன், இது எந்த வகை பிட்ச் என்று எனக்கு தெரிந்தது. நாங்கள் இடையே இடையே விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தோம்.

பெரிய ஷாட் அடிக்க முயன்றபோதெல்லாம் சில விக்கெட்டுகள் விழுந்தன. அதனால் ஒரு செட்டிலான பேட்ஸ்மேன் இறுதி வரை நிற்க வேண்டும் என்று நினைத்தேன். அதையே நான் முயற்சித்தேன், இன்று அது நடந்தது. எனக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பை கருத்தில் கொண்டு, ஆட்ட நிலைமை மற்றும் அணியின் தேவையை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு விளையாடுவது என் கடமை. எப்போதும் நான் திறந்த மனதுடன் தான் விளையாடுகிறேன். விக்கெட்டுகள் அதிகம் விழவில்லை என்றால், நான் இன்னும் முன்பே அதிரடியாக சென்றிருப்பேன். ஆனால் விக்கெட்டுகள் விழுந்ததால், இன்னிங்ஸை நன்றாக முடிப்பது முக்கியமாக இருந்தது” என்றார்.