தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்தப் போட்டியின் போது பேட்டிங் செய்த பவுமாவுக்கு வலது காலின் கெண்டைக்கால் பகுதியில் (Calf Strain) காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஆட்டத்தின் இடையே காயம் காரணமாக வெளியேறினார். பின்னர் மீண்டும் களமிறங்கி ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், மருத்துவப் பரிசோதனையில் காயம் உறுதி செய்யப்பட்டதால் வருகிற 23-ம் தேதி சென்சூரியனில் தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பவுமாவுக்குப் பதிலாக எய்டன் மார்க்ரம் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளது. மேலும், அணியின் ஆடும் லெவனில் டோனி டி சோர்சி இடம்பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பவுமா அணியுடன் தொடர்ந்து இருப்பார்.
தனது காயம் குறித்து பேசிய பவுமா, தொடர்ந்து காயமடைவது ஏமாற்றம் அளிப்பதாகவும், மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பயிற்சிகளை மேற்கொண்டு விரைவில் களத்திற்குத் திரும்புவேன் என்றும் தெரிவித்துள்ளார்.