கிரிக்கெட்

தென்னாப்பிரிக்க டி20 தொடரில் இருந்து நஹித் ராணா விலகல்

மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நஹித் ராணா, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

நஹித் ராணாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வங்கதேச அணி

ஏற்கெனவே காயம் காரணமாக நஹித் ராணா நீண்ட காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வந்தார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சிகிச்சை மற்றும் மறுவாழ்வுப் பயிற்சியை முடித்துவிட்டு வங்கதேசம் திரும்பிய நஹித் ராணா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மருத்துவர்களின் பரிசோதனையில் அவர் பந்துவீசுவதற்குத் தகுதி பெற்றதாகவும் தகவல் வெளியானது. ஆனால் தற்போது டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவரது மறுபிரவேசம் மீண்டும் தள்ளிப்போயுள்ளது.

இதற்கிடையே தென்னாப்பிரிக்கத் தொடரில் காயம் காரணமாக விலகிய மற்றொரு வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்மூத், முழங்கை காயத்துக்கு மேல்சிகிச்சை பெற இங்கிலாந்து செல்ல உள்ளார். அவரது கவுண்டி அணியான கென்ட் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேச அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஒருநாள் தொடர் டிசம்பர் 1-ம் தேதியும், டி20 தொடர் டிசம்பர் 10-ம் தேதியும் தொடங்குகிறது. முக்கிய வேகப்பந்து வீச்சாளரான நஹித் ராணா விலகியிருப்பது வங்கதேச அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

SCROLL FOR NEXT