ஜோகன்னஸ்பர்க்,
வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 557 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 101.2 ஓவர்களில் 400 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வங்காளதேச அணியை தவ்ஹித் ஹிருதோய், லிட்டன் தாஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தின் மூலம் மீட்டது.
6-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 206 ரன்கள் சேர்த்தது. தவ்ஹித் ஹிருதோய் 137 ரன்களும், லிட்டன் தாஸ் 120 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகளையும், டேன் பீட்டர்சன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஜுபைர் ஹம்சா, மார்கஸ் ஆக்கர்மேன் இணைந்து சிறப்பாக விளையாடினர்.
2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 202 ரன்கள் சேர்த்தது. ஹம்சா 83 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஆக்கர்மேன் 157 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் எடுத்திருந்தது. மழை காரணமாக அன்றைய ஆட்டம் பாதிக்கப்பட்டது. அப்போது ரியான் ரிக்கல்டன் 56 ரன்களுடனும், ககிசோ ரபாடா 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரிக்கல்டன் சதமடித்து 102 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து அதிரடியாக விளையாடிய ரபாடா 72 ரன்கள் எடுத்தார்.
8-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 117 ரன்கள் சேர்த்தது. இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 124.1 ஓவர்களில் 557 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பவுமா 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
வங்காளதேசம் தரப்பில் ஹசன் மஹ்முத் 4 விக்கெட்டுகளையும், தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன்மூலம் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி, நான்காம் நாள் இரண்டாவது செஷன் நிலவரப்படி 11 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 14 ரன்களுடன் தொடர்ந்து விளையாடி வருகிறது.