கிரிக்கெட்

தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

ஹார்மர் மீண்டும் அணியின் முக்கிய பந்துவீச்சு ஆயுதமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்கா – வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (நவம்பர் 15) ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்தப் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய உற்சாகத்துடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்குகிறது. மறுபுறம், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப் பிறகு தென்னாப்பிரிக்க மண்ணில் சவாலை எதிர்கொள்ள வங்கதேச அணி தயாராகியுள்ளது

தென்னாப்பிரிக்க அணி

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா, இந்தப் போட்டிக்கான ஆடும் லெவனை ஏற்கனவே அறிவித்துள்ளார். அதன்படி, இரண்டு மாற்றங்களுடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்குகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜுபைர் ஹம்சா மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். மேலும், வேகப்பந்து வீச்சாளர் டேன் பீட்டர்சனும் அணிக்குத் திரும்பியுள்ளார். டேவிட் பெடிங்காம் மற்றும் ஜெரால்டு கோட்ஸி ஆகியோர் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்

குறிப்பாக, ககிசோ ரபாடா, மார்கோ யான்சன், வியான் முல்டர் மற்றும் டேன் பீட்டர்சன் என நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் தென்னாப்பிரிக்கா களமிறங்குகிறது. சுழற்பந்து வீச்சில் சைமன் ஹார்மர் மட்டுமே இடம்பெற்றுள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹார்மர் மீண்டும் அணியின் முக்கிய பந்துவீச்சு ஆயுதமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேச அணி

வங்கதேச அணியைப் பொறுத்தவரை, கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ நான்கு பிரதான பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவது குறித்து ஆலோசித்துள்ளார். பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் நோக்கில் கூடுதல் பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 242 ரன்கள் எடுத்த தவ்ஹித் ஹிரிடாய் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வது வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

SCROLL FOR NEXT