கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.188 கோடி வருவாய் இழப்பு..காரணம் என்ன ?

அரசின் தலையீடு ஆகியவற்றை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு,

2027-ம் ஆண்டுக்கான முதலாவது மகளிர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை இலங்கை இழந்துள்ளது. இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்தத் தொடரை, தற்போது இந்தியா நடத்துகிறது. இதனால் இலங்கை கிரிக்கெட்டுக்கு நேரடியாகவும், சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் மூலமாகவும் சேர்த்து சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.188 கோடி) வருவாய் இழப்பு ஏற்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் நிலவும் ஆளுமைச் சிக்கல்கள் மற்றும் அரசின் தலையீடு ஆகியவற்றை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது இலங்கை கிரிக்கெட், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்துக்கு பதிலாக அரசால் நியமிக்கப்பட்ட குழு மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தொடரில் 6 அணிகள் பங்கேற்க உள்ளன. போட்டிகள் 2027 பிப்ரவரி 14 முதல் 28 வரை இந்தியாவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை இந்தத் தொடரின் ஆறாவது அணியாக தகுதி பெறுவதற்கான போட்டியிலும் இருக்கிறது.

இதற்கு முன்பும் இதேபோன்ற பிரச்சினையால் இலங்கை ஒரு முக்கிய ஐசிசி தொடரை இழந்திருந்தது. 2024 ஆடவர் யு-19 உலகக் கோப்பை இலங்கையிலிருந்து மாற்றப்பட்டு தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. அந்தத் தொடரை இழந்ததால் இலங்கை கிரிக்கெட்டுக்கு சுமார் 2.46 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக இலங்கை கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT