ராஞ்சி,
ஜார்க்கண்ட் டி20 லீக் கிரிக்கெட் தொடர் இன்று ராஞ்சியில் கோலாகலமாக தொடங்குகிறது. ஜூன் 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கேற்று மொத்தம் 27 போட்டிகளில் விளையாட உள்ளன.
இந்த தொடரின் தொடக்க விழாவில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும் முன்னாள் கேப்டனுமான தோனி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். தொடக்கப் போட்டி நிறைவடைந்த பிறகு நடைபெறும் விழாவில் பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் சோட்டாநாக்பூர் ராயல்ஸ், ராஞ்சி டைட்டன்ஸ், கொய்லாஞ்சல் சூப்பர் கிங்ஸ், ஜாம்ஷெட்பூர் ஸ்டீலர்ஸ், தன்பாத் டைமண்ட்ஸ், சந்தால் ஸ்டிரைக்கர்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.
இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சோட்டாநாக்பூர் ராயல்ஸ் மற்றும் ராஞ்சி டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. அதைத் தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது போட்டியில் கொய்லாஞ்சல் சூப்பர் கிங்ஸ் மற்றும் ஜாம்ஷெட்பூர் ஸ்டீலர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
லீக் சுற்றில் மொத்தம் 24 போட்டிகள் நடைபெறும். இதையடுத்து ஜூன் 22-ம் தேதி இரண்டு அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும்.
முதல் அரையிறுதியில், புள்ளிப்பட்டியலில் 1 மற்றும் 4-வது இடம் பிடிக்கும் அணிகள் மோதும், இரண்டாவது அரையிறுதியில் 2 மற்றும் 3-வது இடம் பிடிக்கும் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் ஜூன் 23-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும்.
இந்த தொடரின் அனைத்து போட்டிகளையும் ரசிகர்கள் மைதானத்தில் இலவசமாகக் கண்டு ரசிக்கலாம் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் ஜார்க்கண்ட் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்கள் கிரிக்கெட் விருந்தாக அமைய உள்ளது.