சென்னை,
டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக ஸ்டீவ் ஸ்மித்தை ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தேர்வு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “2017-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் நான் ஆஸ்திரேலிய அணியின் ஒரு பகுதியாக இருந்தேன். அந்த தொடரில் ஸ்டீவ் ஸ்மித் சில அற்புதமான சதங்களை அடித்து வேற் லெவலில் பேட்டிங் செய்தார். அந்த சுற்றுப்பயணத்தில் அவர் 3 சதங்கள் அடித்தார் என்று நினைக்கிறேன். அவர் உண்மையிலேயே அற்புதமான வீரர். அதை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம்” என்று தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் 4-வது இடத்தில் உள்ளார்.
இதுவரை 125 டெஸ்ட் போட்டிகளில் 223 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர், 56.00 என்ற சராசரியுடன் 37 சதங்கள் மற்றும் 45 அரைசதங்கள் உள்பட 10,920 ரன்கள் குவித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 239 ரன்கள் ஆகும்.