கிரிக்கெட்

‘பந்து மீது எச்சிலை தேய்க்க அனுமதிக்க வேண்டும்’ சுப்மன் கில்

எச்சிலை பயன்படுத்த இன்னும் ஏன் அனுமதிக்கவில்லை என்பது புரியவில்லை.

வெலிங்டன்,

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்ததும் இந்திய கேப்டன் சுப்மன் கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சுப்மன் கில் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பந்தை பளபளப்பாக்க அதன் மீது எச்சிலை தேய்ப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தடை விதித்தது. அது இப்போதும் தொடருவது ஆச்சரியம் அளிக்கிறது. கொரோனா காலம் முடிந்து நீண்ட காலமாகிவிட்டது. எச்சிலை பயன்படுத்த இன்னும் ஏன் அனுமதிக்கவில்லை என்பது புரியவில்லை.

இந்த டெஸ்டில் 25-30 ஓவர்களுக்கு பிறகு பந்து மிகவும் மென்மையாகி விட்டது. அவர்களும் இது பற்றி நடுவரிடம் புகார் செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். பந்தின் தரம் குறைந்து விட்டதா (கூக்கபுரா வகை பந்து) அல்லது என்ன நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால் ஆடுகளத்தன்மை பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்காத சூழலில், பந்தும் மென்மையாகி விட்டால் விக்கெட்டுகள் வீழ்த்துவது சிரமமாகி விடும். அதாவது பந்து பேட்டின் விளிம்பில் பட்டு எகிறுவதில்லை. இதனால் பின்பகுதியில் கேட்ச் செய்யும் வாய்ப்பு குறைந்து விடும். பந்து ஆடுகளத்தில் அதிக மாக நகரவில்லை என்றால், எல்.பி.டபிள்யூ. வாய்ப்புகளும் கிடைக்காது.

பந்து வீச்சாளர்கள் தடுமாறும் இது போன்ற ஆடுகளங்களில் பந்தின் தரத்தை பராமரிக்க எச்சிலை பயன்படுத்த அனு மதித்தால். அது அணிகளுக்கு உதவிகரமாக இருக்கும். கொரோனா காலத்தில் கொண்டு வரப்பட்ட அந்த விதி இப் போது தேவையற்றது என்று கருதுகிறேன்.

இவ்வாறு சுப்மன் கில் கூறினார்.

SCROLL FOR NEXT