கிரிக்கெட்

ரன் எடுக்க திணறும் அபிஷேக் சர்மாவுக்கு சுனில் கவாஸ்கர் அறிவுரை

இன்னிங்சின் முதல் பந்திலேயே சிக்சர் அல்லது பவுண்டரி அடிக்க முயற்சிக்க கூடாது என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா, நடப்பு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. உடல்நலக்குறைவால் ஒரு ஆட்டத்தில் ஆடவில்லை. மற்ற 3 ஆட்டங்களிலும் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இந்த நிலையில் அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இது குறித்து கவாஸ்கர் கூறியதாவது:-

அபிஷேக் ஷர்மா அருமையான ஒரு வீரர். ஆனால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அவருக்கு அதிக அழுத்தத்தை கொடுப்பதாக நினைக்கிறேன். அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தை அவர் சிறப்பாக தொடங்கி இருந்தால் இப்போது நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும். அவரிடம் பலவிதமான ஷாட் திறமை இருப்பதால், அவர் களத்தில் சிறிது நேரம் எடுத்துக் கொண்டு ஆடலாம். இன்னிங்சின் முதல் பந்திலேயே சிக்சர் அல்லது பவுண்டரி அடிக்க முயற்சிக்க கூடாது.

அதே நேரம், விரட்டுவதற்கு உகந்த பந்தாக வந்தால் அடிக்கலாம். பிரச்சினை இல்லை. ஆனால் வேண்டுமென்றே பெரிய ஷாட் ஆடக்கூடாது. முதலில் ரன் எடுத்து கணக்கை தொடங்க வேண்டும். அதற்கு 4 பந்து விரயமானாலும் பரவாயில்லை. அதை பிறகு அவரால் சரி செய்ய முடியும். தொடக்கத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். ஒன்று அல்லது 2 ஓவர் நின்று விட்டால், அதன் பிறகு தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். முதல் ரன் தான் முக்கியம். ஒரு ரன் எடுத்து விட்டாலே அனைத்தும் நன்றாக அமையும்.”

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.