கிரிக்கெட்

ஐ.பி.எல். வரலாற்றில் முதல்முறையாக சுனில் நரைன் புதிய சாதனை

இந்தியர் அல்லாத வெளிநாட்டு வீரர் என்ற வகையில் அவருடைய சாதனை மற்றவற்றில் இருந்து வேறுபட்டுள்ளது.

ஐதராபாத்

ஐ.பி.எல். தொடரின் 45-வது ஆட்டம் ஐதராபாத் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் சுனில் நரைன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்த தொடரில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

சுழற்பந்து வீச்சாளரான அவர் சலீல் அரோராவை வீழ்த்தியபோது, 199-ல் இருந்து 200-வது ஐ.பி.எல். விக்கெட்டாக அது உயர்ந்தது. அதனுடன் நிற்காமல், அவருக்கான 4 ஓவரின் கடைசி பந்தில் இஷான் கிஷானை வீழ்த்தி 201-வது விக்கெட்டையும் அவர் கைப்பற்றினார்.

இதனால், ஐ.பி.எல். வரலாற்றில் 200 விக்கெட் கைப்பற்றிய 3-வது பந்து வீச்சாளர் என்ற பெருமையை நரைன் பெற்றுள்ளார். யுஸ்வேந்திர சஹால், அதிக விக்கெட் எடுத்தவராக உள்ளார். சமீபத்தில் புவனேஷ்வர் குமார் 200 விக்கெட் எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அவர்கள் இருவருக்கு அடுத்து நரைன் இந்த சாதனையில் இணைந்துள்ளார். எனினும், இந்தியர் அல்லாத வெளிநாட்டு வீரர் என்ற வகையில் அவருடைய சாதனை மற்றவற்றில் இருந்து வேறுபட்டுள்ளது. 2012-ம் ஆண்டில் இருந்து கொல்கத்தா அணிக்காக நரைன் விளையாடி வருகிறார்.

அதனால், தனிநபர் ஒருவரின் சாதனையாக மட்டுமின்றி அணிக்கான சாதனையாகவும் இது பார்க்கப்படுகிறது. போட்டியின் இறுதியில் ஐதராபாத் அணி 19 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.