கிரிக்கெட்

'இந்திய அணிக்கு திரும்பியே தீருவேன்' - சூர்யகுமார் யாதவ் அதிரடி

2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது கேப்டனாக இருந்தவர் சூர்யகுமார் யாதவ்.

கொல்கத்தா,

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து ரன்கள் குவிக்கப் போவதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

21 பந்துகளில் 60 ரன்கள்

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ், ஐதராபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அதிரடியாக விளையாடினார். 21 பந்துகளைச் சந்தித்த அவர், 6 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் எடுத்தார். வெறும் 15 பந்துகளில் அரைசதத்தையும் கடந்தார்.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்தது. 173 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை அணி, 13.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடருக்குப் பிறகு முதல் முறையாக களமிறங்கிய சூர்யகுமார், தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

தேர்வாளர்களின் முடிவால் ஏமாற்றம்

2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது கேப்டனாக இருந்தவர் சூர்யகுமார் யாதவ். ஆனால், உலகக் கோப்பைக்குப் பிறகு கேப்டன் பதவியில் மாற்றம் செய்யப்பட்டதுடன், அடுத்த தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

இதனால் ஏமாற்றமடைந்ததாக கூறிய சூர்யகுமார், அந்த ஏமாற்றத்தை உத்வேகமாக மாற்றிக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “உலகக் கோப்பையை வென்ற பிறகு, ஐபிஎல் முடிந்ததும் இந்திய அணியின் அடுத்த தொடரில் விளையாடுவோம் என்று இயல்பாகவே எதிர்பார்ப்பீர்கள்.ஆனால், தேர்வாளர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக கேப்டன்சி மாற்றம் குறித்த முடிவை எடுத்திருக்கலாம். இருந்தாலும், நான் நிச்சயமாக ஏமாற்றமடைந்தேன்.

அந்த ஏமாற்றத்தை உத்வேகமாக மாற்றிக்கொள்ள வேண்டும். இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற அதே வேட்கை மீண்டும் வந்துள்ளது. நாட்டுக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்றால், தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து ரன்கள் குவிக்க வேண்டும்” என்றார்.

தோனி படக் காட்சி கொடுத்த உத்வேகம்

மேலும், 'எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியையும் சூர்யகுமார் நினைவுகூர்ந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “அந்தப் படத்தில் தோனியின் நண்பர்கள், தேர்வாளர்கள் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி சிக்சர் அடிக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதுதான் எனது திட்டமாகவும் இருந்தது. தேர்வாளர்கள் நேராக பவுண்டரி அருகே அமர்ந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்” என்று சிரித்தபடி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். அதற்காக மனதளவிலும், ஆட்டத்திறனிலும் பல மாற்றங்களை செய்து வருகிறேன். தொடர்ந்து ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவ விரும்புகிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT