கிரிக்கெட்

சூர்யவன்ஷியின் பேட்டிங்க் அபாரமாக இருந்தது: சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

நேற்றைய வெளியேறுதல் சுற்று ஆட்டத்தில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய வைபவ் சூர்யவன்ஷி, 16 பந்துகளில் அரைசதத்தை கடந்து அசத்தினார்.

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்த இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு கிரிக்கெட் உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவரது அபார ஆட்டத்தை முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

சச்சின் பாராட்டு

சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பதிவில், “வைபவ் சூர்யவன்ஷியின் பேட் ஸ்விங் அபாரமாக இருந்தது. குறிப்பாக, தனது கால்பகுதியை குறிவைத்து வீசப்பட்ட பந்துகளை எதிர்கொள்ள அவர் முன் காலை நகர்த்தி இடத்தை உருவாக்கி ஷாட் அடித்த விதம் மிகவும் சிறப்பானது. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங்கை பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது,”என்று பாராட்டியுள்ளார்.

யுவராஜ் சிங்

முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறுகையில், “பாஸ் பேபி உலக சாதனையை முறியடித்துள்ளார். நம்ப முடியாத அளவுக்கு அசத்தலான ஆட்டம். இந்த சிறுவனை பார்க்கவே மகிழ்ச்சி,”என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, “இந்த தொடரில் வைபவ் சூர்யவன்ஷி செய்ததை விவரிக்க அகராதியில் போதுமான வார்த்தைகள் இல்லை. ரசிகர்கள் அவரது பேட்டிங்கைக் காண காத்திருக்கிறார்கள் என்பதே இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பாதுகாப்பான கைகளில் இருப்பதற்கான சான்று,” என்றார்.