ஆமதாபாத்,
12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் தமிழ்நாடு அணியும், குஜராத் மாநிலத்திற்குட்பட்ட பரோடா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி, தேவ்தார் தலைமையிலான பரோடா அணியுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து 121 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 123 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக ஹரி நிஷாந்த் 35 ரன்கள், பாபா அபர்ஜித் 29 ரன்கள் எடுத்தனர். இன்றைய வெற்றியின் மூலம் சையத் முஷ்டாக் அலி கோப்பையை 2 ஆவது முறையாக தமிழக அணி கைப்பற்றியுள்ளது.