கிரிக்கெட்

சையத் முஷ்டாக் அலி கோப்பை - கடைசி வரை போராடிய ரெயில்வே... முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி வெற்றி

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை இன்று தொடங்கியது.

இந்தூர்,

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் ரெயில்வே அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றியுடன் தொடரைத் தொடங்கியது.

172 ரன்கள் குவித்த தமிழ்நாடு

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை இன்று தொடங்கியது. டிசம்பர் 6-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் எலைட் பிரிவில் 32 அணிகள் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

தொடக்க நாளில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு - ரெயில்வே அணிகள் மோதின. இந்தூரில் உள்ள டேலி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரெயில்வே அணியின் கேப்டன் முகம்மது சைப் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.

ஷாருக் கான் அதிரடி

தொடக்க வீரர் அமித் சத்விக் 28 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். பி. சச்சின் 34 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார். நடுவரிசையில் களமிறங்கிய ஷாருக் கான் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 5 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும்.

இறுதிக்கட்டத்தில் ஆர். ராஜ்குமார் 13 பந்துகளில் 31 ரன்கள் விளாசினார். இதனால் தமிழ்நாடு அணி 172 ரன்கள் குவித்தது.

ரெயில்வே அணிக்கு அதிர்ச்சி

இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ரெயில்வே அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணி 13 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதன்பிறகு ஜூபைர் அலி கான், தௌபிக் உத்தீன் மொண்டல் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. தௌபிக் 22 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார். ஜூபைர் அலி கான் 37 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தது.

இருப்பினும், கடைசி வரை போராடிய ரெயில்வே அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பந்துவீச்சில் அசத்திய தமிழ்நாடு

தமிழ்நாடு தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன் 3 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சாய் கிஷோர், குர்ஜப்னீத் சிங், சன்னி சந்தூ ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதன் மூலம் தமிழ்நாடு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியது.

SCROLL FOR NEXT