மான்செஸ்டர்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சாம் கரன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 19 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. இறுதியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் 1 விக்கெட் வீழ்த்தினார்.
இதன்மூலம் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டை எட்டினார்.
டி20 போட்டியில் 100 விக்கெட்டை கைப்பற்றிய முதல் இந்திய சுழற்பந்து வீரர் என்ற சாதனையை அக்சர் படேல் படைத்தார். ஒட்டுமொத்த இந்திய பந்துவீச்சாளர்களில் 4-வது இடம் அவருக்கு கிடைத்தது.இந்தப் பட்டியலில் அர்ஷ்தீப்சிங் (134 விக்கெட்), பும்ரா (121), ஹர்திக் பாண்ட்யா (114) ஆகியோருக்கு அடுத்து அக்சர் படேலும் இணைந்தார்.