சென்னை,
டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அக்சர் படேலும் அணியில் இடம் பிடித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர். அதில் சாம்சன் அதிரடியாக விளையாடி 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன், அபிஷேக் சர்மாவுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அபிஷேக் சர்மா அரைசதமடித்து மீண்டும் பார்முக்கு திரும்பினார். அவர் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 38 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் திலக் வர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்தது. ஹர்திக் 23 பந்துகளில் 50 ரன்களும், திலக் 16 பந்துகளில் 44 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.
இதையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. அந்த அணியில் பிரைன் பென்னட் மற்றும் மருமனி ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் மருமனி 20 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மேயர்ஸ் 6 ரன்களில் வெளியேறினார்.
அடுத்ததாக பிரைன் பென்னட்டுடன், கேப்டன் சிக்கந்தர் ராசா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்ட பிரையன் பென்னட் 34 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த ஜோடியில் சிக்கந்தர் ராசா 31 (21) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய ரியான் பர்ல் (0) ரன் ஏதும் எடுக்காமலும், டோனி முனியோங்கா 11 ரன்களும், முசெகிவா 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
முடிவில் பிரைன் பென்னட் 59 பந்துகளில் 97 ரன்களும், எவன்ஸ் 1 ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, அக்சர் பட்டேல் மற்றும் சிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஜிம்பாப்வே அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, சூப்பர் 8 சுற்றின் தனது முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.