கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: ஓமன் அணியை பந்தாடி ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி

ஆஸ்திரேலிய அணி 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்தது.

பல்லேகல்லே,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்று வரும் 40-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஓமன் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஓமன் அணியின் பேட்ஸ்மேன்கள், ஆஸ்திரேயியாவின் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். வசிம் அலி அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் ஓமன் அணி 16.2 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜாம்பா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்சேல் மார்சும், டிராவிஸ் ஹெட்டும் களமிறங்கினர். இருவரும் ஓமன் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். ஹெட் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி வந்த மிட்சேல் மார்ஷ், 32 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 63 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்தது. இதன் மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. சூப்பர் 8 சுற்றில் இருந்து ஆஸ்திரேலிய அணி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT