கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு...காரணம் என்ன ?

கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

சென்னை ,

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது 7-ம் தேதி துவங்கி மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் அயர்லாந்தையும் (பிப்.11-ந் தேதி), 2-வது ஆட்டத்தில் ஜிம்பாப்வேயையும் (பிப்.13) கொழும்பில் சந்திக்கிறது. 3-வது ஆட்டத்தில் இலங்கையையும் (பிப்.16), 4-வது மற்றும் கடைசி லீக்கில் ஓமனையும் (பிப்.20) பல்லகெலேவில் எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் ஆஷஸ் தொடரின் போது காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சி நடைமுறைகளை சிட்னியில் மேற்கொண்டு வருகிறார். இதனால் அவர் இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய அணியினருடன் காலதாமதாகவே இணைவார் என்று ஆஸ்திரேலிய அணியின் தேர்வாளர் டோனி டோட்மைட் தெரிவித்துள்ளார். எனவே ஹேசில்வுட் தொடக்க கட்ட லீக் ஆட்டங்களை தவறவிடுகிறார். அவர் எப்போது அணியினருடன் இணைவார் என்பது தெரிவிக்கப்படவில்லை. வேகப்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் சீன் அப்போட் மாற்று வீரராக ஆஸ்திரேலிய அணியினருடன் பயணிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.