கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: நேபாளம் அணியை வீழ்த்தி இத்தாலி அணி வரலாற்று வெற்றி

விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் எடுத்து இத்தாலி வெற்றி பெற்றது.

மும்பை,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு தகுதி பெறும்.

தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற 17வது ஆட்டத்தில் நேபாளம் - இத்தாலி அணிகள் மோதின.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இத்தாலி அணியின் கேப்டன் ஹாரி மேனின்டி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நேபாளம் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் இத்தாலி அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நேபாளம் அணி தடுமாறியது. இதனால் நேபாளம் அணி 19.3 ஓவர்கள் முடிவில் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஆரிப் ஷேய்க் 27 ரன்கள் எடுத்தார். இத்தாலி அணியில் கிரிஷான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 124 ரன்கள் இலக்குடன் இத்தாலி அணி விளையாடியது.

தொடக்க வீரர்களாக ஜஸ்டின் மோஸ்கா , அந்தனி மோஸ்கோ இருவரும் களமிறங்கினர். சிறப்பாக விளையாடி இருவரும் ரன்கள் குவித்தனர். பந்துகளை, பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டனர். இருவரும் அரைசதமடித்து அசத்தினர்.

இதனால் 12.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இத்தாலி வெற்றி பெற்றது. இது இத்தாலி அணிக்கு முதல் உலகக் கோப்பை தொடராகும். அதன்படி உலகக் கோப்பை தொடரில் இத்தாலி பெற்ற முதல் வரலாற்று வெற்றியாகும்