கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை; நியூசிலாந்து அணிக்கு அடிமேல் அடி.!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் நியூசிலாந்து அணிக்கு தொடர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

துபாய்,

7-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில், நேற்றைய போட்டியின் போது, பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராவ்ஃப் வீசிய பந்தால் நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்திலுக்கு கால் பெருவிரலில் காயம் ஏற்பட்டது.

ஏற்கனவே, கடந்த செவ்வாய்க்கிழமையன்று கால் தசை நார் கிழிவால் ஏற்பட்ட காயம் காரணமாக லாக்கி பெர்குசன் விலகி உள்ளார். இந்நிலையில், கப்திலுக்கு ஏற்பட்டுள்ள காயம் பெரும் இடியாக நியூசிலாந்து அணிக்கு அமைந்துள்ளது.

இது குறித்து நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறுகையில், ஐ.சி.சி. தொழில்நுட்ப கமிட்டி, பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் பெர்குசனுக்கு பதிலாக மாற்று வீரராக ஆடம் மில்னேவை விளையாட அனுமதிக்கவில்லை. இது ஏமாற்றம் தருகிறது. இது குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். கப்தில் விளையாடுவாரா மாட்டாரா என்பதை இன்னும் ஒருநாள் கழித்து தான் உறுதியாக கூற முடியும் என்று அவர் கூறினார்.