கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை தகுதி சுற்று: போர்ச்சுகல் கேப்டனாக ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் நியமனம்

இதையடுத்து போர்ச்சுகல் அணி அறிவிக்கப்பட்டது.

லிஸ்பன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 4 டெஸ்ட், 16 ஒருநாள் போட்டி மற்றும் 24 இருபது ஓவர் போட்டிகளில் ஆடியவர் ஆல்-ரவுண்டர் மோசஸ் ஹென்ரிக்ஸ். 39 வயதான அவர் கடந்த மாதம் ஆஸ்திரேலிய உள்ளூர் போட்டிகள் அனைத்தில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதேநேரத்தில் வெளிநாட்டு லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று தெரிவித்து இருந்தார். அத்துடன் அவர் ஐரோப்பிய 20 ஓவர் பிரிமீயர் லீக் போட்டியில் கிளாஸ்கோ காஸ்மிக் அணிக்காக ஒப்பந்தம் ஆனார்.

மோசஸ் ஹென்ரிக்ஸின் பூர்வீகம் போர்ச்சுகல் ஆகும். சிறு வயதில்குடும்பத்தினருடன் ஆஸ்திரேலியாவில் குடியேறி அங்கு உள்ளூர் போட்டிகளில் ஆடி முன்னேற்றம் கண்டார். ஓய்வுக்கு பிறகு சொந்த நாட்டு அணிக்காக விளையாடும் ஆர்வத்தில் இருந்தார்.

2028-ம் ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு தரவரிசையில் 37-வது இடத்தில் இருக்கும் போர்ச்சுகல் அணி முதல்முறையாக தகுதி பெறுவதற்கான முயற்சிகளை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹென்ரிக்சின் அனுபவத்தை பயன்படுத்த முடிவு செய்தது. அவரும் அதற்கு சம்மதித்துள்ளார். இதையடுத்து போர்ச்சுகல் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக மோசஸ் ஹென்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தகுதி சுற்றில் போர்ச்சுகல் அணி, இஸ்ரேல், ஜெர்மனி, கிரீஸ், செக்குடியரசு ஆகிய அணிகளுடன் விளையாட உள்ளது.