சென்னை,
2026 டி20 உலகக் கோப்பை தொடர் ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 போட்டி முடிவடைந்த நிலையில், அரையிறுதி ஆட்டங்கள் நடக்க உள்ளன. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவும் நியூசிலாந்தும் மோதும் அதே வேளையில், இந்தியாவும் இங்கிலாந்தும் இரண்டாவது அரையிறுதியில் மோதுகின்றன.
முதல் அரையிறுதிப் போட்டி நாளை கொல்கத்தாவின் ஈடன் கார்டன்னில் நடக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது அரையிறுதிப் போட்டி 5-ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி இரவு 7 மணிக்கும் தொடங்குகிறது.
இந்தநிலையில், இந்த முக்கியமான போட்டியில் மழை பெய்தால் என்ன நடக்கும்? என்ற கேள்விக்கு ஐ.சி.சி தெளிவான பதிலை அளித்துள்ளது. திட்டமிடப்பட்ட நாளில் மழை பெய்து குறைந்தது ஐந்து ஓவர்கள் கூட விளையாட முடியாவிட்டால், போட்டி அடுத்த நாளில்(ரிசர்வ்) நடத்தப்படும். இருப்பினும், ரிசர்வ் நாளுக்குச் செல்லாமல் அதே நாளில் முடிந்தவரை ஆட்டத்தை முடிக்க நடுவர்கள் முயற்சிப்பார்கள். ரிசர்வ் நாளில் கூட முடிவு தெரியாவிட்டால், சூப்பர் 8 புள்ளிகளின் அடிப்படையில் இறுதிப் போட்டியாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள்.
இந்திய அணி முழு பார்மில் இருப்பதாகவும், நட்சத்திர வீரர்கள் சிறப்பாக செயல்படுவதாகவும் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். மறுபுறம், இங்கிலாந்தும் வலுவாக உள்ளது. தற்போது எந்த இரண்டு அணிகள் கோப்பையை நோக்கி அடியெடுத்து வைக்கும் என்பதை அறிய, நாம் இன்னும் இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டும்.