சென்னை,
தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் உத்தரகாண்ட் அணி 134 ரன்னில் சுருண்டது.
92-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் (எலைட்) 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
போட்டியின் 2-வது சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. இதில் 'டி' பிரிவில் தமிழ்நாடு- உத்தரகாண்ட் இடையிலான மோதல் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கியுள்ளது. முந்தைய நாள் இரவு பெய்த மழையால் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் தாமதமாக தொடங்கியது. 'டாஸ்' ஜெயித்த தமிழக கேப்டன் சாய் கிஷோர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த உத்தரகாண்ட் அணி, தமிழகத்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 56.2 ஓவர்களில் 134 ரன்னில் சுருண்டது. அவ்னீஷ் சுதா (54 ரன்), மயங்க் மிஷ்ரா (33 ரன்), லக்ஷயா ராய்சந்தனி (15 ரன்) வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. தமிழகம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங், சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி ஆட்ட நேர முடிவில் 27 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. விமல் குமார் (0), என்.ஜெகதீசன் (37 ரன்) வீழ்ந்தனர். பிரதோஷ் ரஞ்சன் பால் (37 ரன்), பாபா இந்திரஜித் (9 ரன்) களத்தில் உள்ளனர்.
நியூ சண்டிகாரில் தொடங்கிய சத்தீஷ்காருக்கு எதிரான ஆட்டத்தில் (பி பரிவு) முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 4 விக்கெட்டுக்கு 269 ரன் எடுத்துள்ளது. நியூசிலாந்து தொடருக்கு தயாராகும் வகையில் இந்த ஆட்டத்தில் களம் கண்ட சுப்மன் கில் 1 ரன்னில் போல்டானார். கேப்டன் உதய் சஹாரன் சதம் (106 ரன்) அடித்தார்.
குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் (சி) டெல்லி அணி ஒரே நாளில் 4 விக்கெட்டுக்கு 381 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. முதல்தர கிரிக்கெட்டில் தனது 'கன்னி' சதத்தை அடித்த பிரியான்ஷ் ஆர்யா ஒரு ரன்னில் இரட்டை சதத்தை கோட்டை விட்டார். அவர் 199 ரன்களில் (221 பந்து, 24 பவுண்டரி, 6 சிக்சர்) போல்டானார். கேப்டன் ஆயுஷ் பதோனி 115 ரன்கள் விளாசி அவுட் ஆகாமல் உள்ளார்.
பிளாஸ்பூரில் (டி) நடக்கும் முன்னாள் சாம்பியன் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் இமாசலபிரதேச அணி 39.5 ஓவர்களில் 140 ரன்னில் அடங்கியது. வேகப்பந்து வீச்சாளர் துஷர் தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து ஆடிய மும்பை அணி 2 விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்துள்ளது.
சவுராஷ்டிராவுக்கு எதிரான ஆட்டத்தில் கர்நாடகா 8 விக்கெட்டுக்கு 281 ரன்கள் சேர்த்துள்ளது. மத்திய பிரதேசத்துக்கு எதிரான மோதலில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த புதுச்சேரி அணி 65.2 ஓவர்களில் 177 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. தடுமாற்றத்துடன் தொடங்கிய மத்தியபிரதேசம் 2 விக்கெட்டுக்கு 23 ரன் எடுத்துள்ளது.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.