டார்வின்,
பந்து பேட்டில் பட்டதாக உணர்ந்ததாக சுமித் கூறினார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக் கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் ஆஸ்திரேலியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் டார்வினில் நேற்று தொடங்கியது.
'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அப்போது ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் 7 ரன்களில் இருந்தபோது எபாதத் ஹூசைன் பந்துவீச்சில் ஷாட் ஆட முயன்றார். அந்த பந்து அவரது பேட்டில் உரசியபடி விக்கெட் கீப்பர் லிட்டன் தாசின் கைகளில் சென்றது.
வங்காளதேச வீரர்கள் அவுட் கேட்டு முறையிட்டபோதும், கள நடுவர் குமார் தர்மசேனா அவுட் வழங்கவில்லை. இதனால் சுமித் சில அடிகள் பெவிலியன் நோக்கி நடந்துவிட்டு, பின்னர் மீண்டும் களத்தில் நின்றார்.
இதையடுத்து வங்காளதேச அணி நடுவரின் முடிவை எதிர்த்து டிஆர்எஸ் முறையீடு செய்தது. ரீப்ளேயில் ஸ்னிக்கோ மீட்டர் மூலம் சோதனை செய்யப்பட்டபோது, பந்து பேட்டில் பட்டதற்கான தெளிவான அடையாளம் எதுவும் பதிவாகவில்லை. இதனால் கள நடுவரின் ‘நாட்-அவுட்’ முடிவு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சுமித் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பினார்.
“தொழில்நுட்பம் என்னைக் காப்பாற்றியது”
ஆட்டம் முடிந்த பிறகு இந்த சம்பவம் குறித்து ஸ்டீவன் சுமித்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “பந்து பேட்டில் பட்டதாக நான் உணர்ந்தேன். ஆனால் தொழில்நுட்பம் என்னைக் காப்பாற்றி விட்டது” என்று தெரிவித்துள்ளார்.
தேனீர் இடைவேளைக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 53 ஓவர்களில் 198 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி ஆட்ட நேர முடிவில் 24 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.