கிரிக்கெட்

இந்திய அணிக்கு விரைவில் புதிய உதவி பயிற்சியாளர்கள்

புதிய பீல்டிங் பயிற்சியாளர் தேர்வு குறித்து 2-3 பேரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக கடந்த 2 ஆண்டாக இருந்து வந்த ரையான் டென்டஸ்சாட் (நெதர்லாந்து) மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக பணியாற்றிய டி.திலிப் (தெலுங்கானா) ஆகியோரின் பதவி காலம் கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்தது.

ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை

சமீபத்தில் நடந்த அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான போட்டிகளில் அவர்கள் உதவி பயிற்சியாளராக இருந்தாலும் அவர்களுடைய ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. இந்த நிலையில் அவர்களுக்கு பதிலாக புதிய உதவி பயிற்சியாளர்களை நியமிக்கும் நடவடிக்கையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இறங்கி உள்ளது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் தேவஜித் சைக்கியா கூறுகையில், 'டென்டஸ்சாட், திலிப் பதவி காலம் முடிந்தாலும், இங்கிலாந்து தொடர் வரை அணியினருடன் தொடர்ந்தனர். அவர்களது ஒப்பந்தத்தை வாரியம் நீட்டிக்கவில்லை. அவர்களது ஒப்பந்தம் முடிந்து விட்டதால் ராஜினாமா ஏற்பா? என்ற கேள்விக்கே இடமில்லை.

புதிய பீல்டிங் பயிற்சியாளர்

புதிய பீல்டிங் பயிற்சியாளர் தேர்வு குறித்து 2-3 பேரிடம் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஓரிரு நாட்களில் இறுதி செய்வோம் என்று எதிர்பார்க்கிறோம். இலங்கை தொடருக்கான இந்திய அணியில் புதிய பீல்டிங் பயிற்சியாளர் இருப்பார்' என்றார்.

முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் சுபதீப் கோஷ் (அசாம்) புதிய பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. டென்டஸ்சாட் மீண்டும் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா அணியின் பயிற்சி குழுவில் இணைய உள்ளார்.