ஆமதாபாத்,
ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி, குஜராத் அணியை எதிர்கொண்டுள்ளது. இப்போட்டிக்கு முன்னதாக தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பேசிய கிரிக்கெட் ஜாம்பாவான் சச்சின் டெண்டுல்கர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சில முக்கிய சீர்த்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
'இம்பாக்ட் பிளேயர் விதி நீக்கப்பட வேண்டும். டி20 போட்டியில் வெறும் 20 ஓவர்கள்தான் விளையாட வேண்டும். அதிலும் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை அணியில் சேர்க்கிறோம். ஏற்கனவே பந்துவீச்சாளர்கள் கடுமையாக சவாலை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த விதி அந்த சமநிலையை மேலும் குலைக்கிறது. இம்பாக்ட் பிளேயர் விதிமுறையால் ஆல்ரவுண்டர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய் ஒரு கட்டத்தில், அல்லது ஒரு காலத்தில் ஆல்ரவுண்டர்கள் என்பவர்கள் உருவாகாமலே போகுமாறு ஆகிவிடும்
பவர்ப்ளே தற்போது 6 ஓவராக உள்ளது. இதனை இரண்டாக பிரிக்க வேண்டும். முதல் 4 ஓவர் பேட்டர்களுக்காக பவர்பிளே. தற்போது இருப்பது போன்று 2 வீரர்கள் மட்டுமே உள்வட்டத்திற்கு வெளியில் இருக்க வேண்டும். 2-வது பவர்பிளே பந்து வீச்சு அணிக்கானது. அவர்கள் இந்த பவர்பிளேயை எப்போது வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம். அப்போது கூடுதலாக ஒரு பீல்டரை உள்வட்டத்திற்கு வெளியே வைத்துக் கொள்ள அனுமதிக்கலாம்.
பேட்டர்கள் 20 ஓவர்கள் வரை பேட்டிங் செய்கிறார்கள். அப்படி இருக்கும்போது, சிறந்த பந்து வீச்சாளர் ஏன் 5 ஓவர்கள் வீசக்கூடாது?. இதனால் பந்து வீச்சாளர் ஒருவரை 5 ஓவர்கள் வீச அனுமதிக்க வேண்டும். அந்த சிறந்த பந்துவீச்சாளர் இன்னும் ஒரு ஓவர் அதிகமாக பந்துவீசுவதை ரசிகர்கள் பார்க்க விரும்ப மாட்டார்களா?
இவ்வாறு அவர் கூறினார்.