லிங்கன்,
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் அதிகாரபூர்வமற்ற 4 நாள் டெஸ்ட் போட்டியில், இந்தியா ஏ அணி வெற்றியை நெருங்கிய நிலையில் ஆட்டம் டிராவில் முடிந்தது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி, நியூசிலாந்து பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் யஷ் ரத்தோட் மட்டும் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்தார். தேவ்தத் படிக்கல் 33 ரன்கள் சேர்த்தார்.
தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து ஏ அணி 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரைஸ் மரியு 76 ரன்களும், டீன் பாக்ஸ்கிராப்ட் 51 ரன்களும் எடுத்தனர். கர்டிஸ் ஹீபி 44 ரன்களும், கிறிஸ்டியன் கிளார்க் 42 ரன்களும் சேர்த்தனர். இதன் மூலம் நியூசிலாந்து ஏ அணி முதல் இன்னிங்சில் 204 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்சில் இந்தியா ஏ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சாய் சுதர்சனும் தேவ்தத் படிக்கலும் இணைந்து ரன்களைக் குவித்தனர். சாய் சுதர்சன் 91 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய படிக்கல், இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 199 ரன்களில் ஆட்டமிழந்தார். யஷ் ரத்தோட் 66 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 52 ரன்களும் எடுத்தனர். கீழ்வரிசையில் அவ்கிப் நபி 38 ரன்களும், ஆகாஷ் தீ ஆட்டமிழக்காமல் 25 ரன்களும் சேர்த்தனர்.
இதனால் இந்தியா ஏ அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 516 ரன்கள் குவித்தது. இதன் மூலம் நியூசிலாந்து ஏ அணிக்கு 313 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
313 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து ஏ அணி, இந்தியப் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது. அவ்கிப் நபி தொடக்கத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தார்.
இருப்பினும், கர்டிஸ் ஹீபி நிலைத்து நின்று விளையாடினார். ஆட்டம் முடிவுக்கு வந்தபோது நியூசிலாந்து ஏ அணி 65 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. ஹீபி 90 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இந்திய அணி இன்னும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி பெறும் சூழல் இருந்தது. ஆனால், மழை மற்றும் மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. இதனால் போட்டி டிராவில் முடிந்தது. வெற்றியை நெருங்கிய இந்தியா ஏ அணிக்கு இது ஏமாற்றமாக அமைந்தது.