டிரெண்ட் பிரிட்ஜ்,
டாம் லாதம் மற்றும் டிவான் கான்வே தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய டாம் லாதம் மற்றும் டிவான் கான்வே தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
டாம் லாதம் 149 பந்துகளில் தனது 17-வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் டிவான் கான்வே, 174 பந்துகளில் தனது 8-வது டெஸ்ட் சதத்தை எட்டினார். அப்போது அணி 317 ரன்கள் எடுத்திருந்தபோது டாம் லாதம் 151 ரன்களில் கேட்ச் ஆனார். தொடர்ந்து டிவான் கான்வே 157 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஹென்றி நிகோல்ஸ் 36(48) ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 7 (22) ரன்களிலும் அவுட்டாகினர்.
438 ரன்களுக்கு ஆல் அவுட்
இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 84.1 ஓவர்களில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 361 ரன்கள் குவித்தது. தொடர்ந்து இன்று 2-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இங்கிலாந்து அணி இன்று சிறப்பாக பந்துவீசியது. இதனால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தினறியதுடன், விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர்.
இறுதியில் நியூசிலாந்து அணி 114.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் கேப்டன் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. இங்கிலாந்து அணி 2-ம் நாள் தேநீர் இடைவேளை வரை 14 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 73 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.