லண்டன்
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில், 56 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 248 ரன்களை இங்கிலாந்து எடுத்திருந்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது.
அரை சதம்
இந்த போட்டியின்போது மழை குறுக்கிட்டது. இதனால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், மழை நின்ற பின் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியின் பென் டக்கெட் (17), எமிலியோ (8) ரன்களில் ஆட்டமிழந்தனர். காக்ஸ் (55) அரை சதம் பூர்த்தி செய்துள்ளார். கேப்டன் ரூட் (4), ஹாரி புரூக் (15), லாரன்ஸ் (17) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் ஜேமீ ஸ்மித் (61) தன் பங்கிற்கு அரை சதம் விளாசினார்.
248 ரன்கள்
எனினும், ஒல்லி ராபின்சன் ரன் எதுவும் எடுக்காமலும், ஆர்ச்சர் (14) ரன்களிலும் வெளியேறினர். ஜோஷ் டங் (1), அட்கின்சன் (34) ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஸ்மித் மற்றும் காக்ஸ் ஆகியோரின் அதிரடி பேட்டிங், இங்கிலாந்து அணி 250 ரன்களை நெருங்கி வர உதவியது.
போட்டியில் 50 நிமிடங்கள் மீதம் இருந்த நிலையில், லைட் (ஒளி) வெளிச்சம் சரிவர தெரியாத நிலையில், ஆட்டம் தடைபட்டது. இதனை தொடர்ந்து ஆட்டம் முடித்து கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. அப்போது 56 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 248 ரன்களை இங்கிலாந்து எடுத்திருந்தது.
பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் 4 விக்கெட்டுகள், முகமது அலி 3 விக்கெட்டுகள் எடுத்தனர். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்கிறது.