போர்ட் ஆப் ஸ்பெயின்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கடந்த 2ம் தேதி தொடங்கியது. கரீபியனில் உள்ள டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டின் தலைநகர் போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் உள்ள மைதானத்தில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 344 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஜஸ்டின் 73 ரன்களும், கேப்டன் ரோஸ்டன் 70 ரன்களும் குவித்தனர். பாகிஸ்தான் தரப்பில் அந்த அணியின் சஜித் கான் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் அப்துல் அதிகபட்சமாக 160 ரன்கள் குவித்தார். சிறப்பாக பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜோமல் வரிகன் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 43 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் தடுமாறி வருகிறது. அந்த அணியின் வீரர்கள் அனைவரும் பாகிஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 103 எடுத்துள்ளது. இதன் மூலம் 2வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 60 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இப்போட்டியில் இன்னும் 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் பாகிஸ்தான் வெற்றிபெறும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.