கிரிக்கெட்

வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் : 2வது நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 211/4

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் ஆப்கானிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்துள்ளது.

துபாய்,

வங்காளதேசத்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில், ரஹ்மத் ஷா மற்றும் அப்துல் மாலிக்கின் சிறப்பான பேட்டிங்கால் ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் ஆப்கானிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்துள்ளது.

அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டியின் இரண்டாவது நாளில், வங்காளதேச அணி முதல் இன்னிங்ஸில் 346 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்திருந்த வங்காளதேசம், இரண்டாவது நாளில் மேலும் 29 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது சலீம் சஃபி 4 விக்கெட்டுகளையும், யாமின் அகமத்சாய் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட்டன. சேதிகுல்லா அடல் 17 ரன்களிலும், ஷாஹிதுல்லா கமால் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

ஆனால், அப்துல் மாலிக் மற்றும் ரஹ்மத் ஷா இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர்.

அப்துல் மாலிக் தனது முதல் டெஸ்ட் அரைசதத்தைப் பதிவு செய்து 62 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 4 ரன்களில் ஆட்டமிழந்ததால் ஆப்கானிஸ்தான் 139 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் நம்பிக்கையாகத் திகழ்ந்த ரஹ்மத் ஷா, நிதானமாக விளையாடி ரன்களைக் குவித்தார்.

அவருடன் இணைந்த விக்கெட் கீப்பர் இக்ரம் அலிகில், விக்கெட்டை இழக்காமல் சிறப்பாக விளையாடினார். 2வது நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 211ரன்கள் எடுத்தது. ரஹ்மத் ஷா 84 ரன்களுடனும், இக்ரம் அலிகில் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

SCROLL FOR NEXT