அபுதாபி,
ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு 479 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் சத்மான் இஸ்லாம் 67 ரன்களும், தன்ஸித் ஹசன் 83 ரன்களும், லிட்டன் தாஸ் 53 ரன்களும் எடுத்தனர். இதனால் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 346 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மத் ஷா ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் எடுத்தார். அப்துல் மாலிக் 62 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கத் தவறியதால், ஆப்கானிஸ்தான் அணி 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
வங்காளதேச அணியின் ஹசன் மெக்மூத் 5 விக்கெட்டுகளையும், எபாடத் ஹொசைன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 106 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணியில் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 82 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் 81 ரன்களும் எடுத்தனர்.
லிட்டன் தாஸ் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் ஆட்டமிழக்காமல் 102 ரன்கள் எடுத்தார். மெஹிதி ஹசன் மிராஸ் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் சேர்த்தார். இதனால் வங்கதேச அணி 372 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை முடித்துக்கொண்டது.
முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலையையும் சேர்த்து வங்கதேச அணி மொத்தம் 478 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு 479 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கடினமான இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள ஆப்கானிஸ்தான் அணி, 17 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்களுடன் விளையாடி வருகிறது.