லிங்கன்,
இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் மூன்று போட்டிகளும் டிராவில் முடிந்ததால் 0-0 என்ற கணக்கில் சமனில் நிறைவடைந்தது.
லிங்கனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து ஏ அணி 317 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 204 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, தேவ்தத் படிக்கலின் 199 ரன்கள், சாய் சுதர்சனின் 91 ரன்கள் ஆகியவற்றின் உதவியுடன் 516 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 313 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து ஏ அணி, 2-வது இன்னிங்ஸில் 187 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 346 ரன்கள் எடுத்தது. இதில் துருவ் ஜூரெல் 105 ரன்கள் விளாசினார்.
தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து ஏ அணி 424 ரன்கள் குவித்தது. இதையடுத்து 78 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 155 ரன்களும், யாஷ் ரத்தோட் 100 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனால் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்திருந்தபோது இரு அணிகளும் ஆட்டத்தை முடித்துக்கொள்ள ஒப்புக்கொண்டன. இதனால் இந்தப் போட்டியும் டிராவில் முடிந்தது.
லிங்கனில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 464 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொண்டது. இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 102 ரன்களும், சாய் சுதர்சன் 88 ரன்களும், திலக் வர்மா 81 ரன்களும், துருவ் ஜூரெல் 71 ரன்களும் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து ஏ அணி 36 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால், தொடர்ந்து பெய்த கனமழையால் 3-வது மற்றும் 4-வது நாள் ஆட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. கடைசி 2 நாட்களிலும் ஒரு பந்துகூட வீசப்படாததால் போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் எந்த அணியும் வெற்றி பெறாததால் தொடர் 0-0 என்ற கணக்கில் சமனில் நிறைவடைந்தது.