கிரிக்கெட்

600-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி.!

இன்றைய இலங்கைக்கு எதிரான போட்டி இந்தியாவின் 600-வது டெஸ்டாகும்.

காலே,

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்திய அணி 1932-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரு கிறது. இன்றைய இலங்கைக்கு எதிரான போட்டி இந்தியாவின் 600-வது டெஸ்டாகும். இந்த மைல்கல்லை எட்டும் 3-வது அணி இந்தியாவாகும். முதல் இரு இடங்களில் இங்கிலாந்து (1.097 டெஸ்ட்), ஆஸ்திரேலியா (883) உள்ளன.

இந்திய அணி இதுவரை 599 டெஸ்டுகளில் ஆடி 186-ல் வெற்றியும். 188-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. 224 டெஸ்ட் டிரா ஆனது. மற்றொரு போட்டி சமனில் (டை) முடிந்தது.

இது பற்றி இந்திய கேப்டன் சுப்மன் கில் நிருபர்களிடம் கூறுகையில், 'எனது நாட்டை 600-வது டெஸ்ட் போட்டியில் வழிநடத்துவது கவுரவம். அதுவும் சுதந்திர தினத்தன்று இத்தகைய சிறப்புமிக்க போட்டியில் விளையாடுவது மிகப் பெரிய பெருமையாகும்.

கேப்டன் பொறுப்பை இப்போது நான் இயல்பாக உணர்கிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வதே எங்களது இலக்கு. அதற்கு நாங்கள் 6-7 டெஸ்டுகளில் வெற்றி பெற வேண்டும். அதை இங்கிருந்தே தொடங்க விரும்புகிறோம்' என்றார்.