மும்பை,
சர்வதேச கிரிக்கெட்டில் இனி எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் இருதரப்பு தொடர்களை நடத்தும் நடைமுறை முடிவுக்கு வர வேண்டும் என்று ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி சஞ்சோக் குப்தா தெரிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளுக்கு ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தெளிவான சூழல், பாரம்பரியம், போட்டித்தன்மை மற்றும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குப்தாவின் பார்வையில்,
ஒவ்வொரு இருதரப்பு தொடரும் வெறும் போட்டிகளின் தொகுப்பாக இல்லாமல், அதற்கு ஒரு பெரிய நோக்கமும் முக்கியத்துவமும் இருக்க வேண்டும். கிரிக்கெட்டை தொடர்ந்து வளர்க்கவும், நாடுகள் அதிக அளவில் முதலீடு செய்யவும், ரசிகர்களின் ஆர்வத்தை தக்கவைக்கவும் இந்த மாற்றம் அவசியம். கிரிக்கெட்டை ஒரு நாட்டில் தொடர்ந்து நடத்துவதற்கே மிகப்பெரிய அளவில் நிதி மற்றும் நிதி சாராத வளங்கள் தேவைப்படுகின்றன. எனவே, ரசிகர்களுக்கு ஏன் இந்தப் போட்டி முக்கியம் என்பது புரியாத வகையில் தொடர்ந்து இருதரப்பு தொடர்களை நடத்தினால், அந்த முறையை நாடுகளால் நீண்ட காலத்திற்கு தாங்கிக்கொள்ள முடியாது என்பதே குப்தாவின் கருத்து. போட்டிகளுக்கு சரியான நோக்கமும் எதிர்பார்ப்பும் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.