ஐதராபாத்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' டிராபிக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முடிவடைந்த முதல் 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மொத்தம் 23 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அதிலும் குறிப்பாக 5வது போட்டியில் அபாரமாக செயல்பட்ட அவர் இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினார். இதனால் அவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்து தொடரில் அபாரமாக செயல்பட்ட முகமது சிராஜை தெலுங்கானா காவல்துறையும் பாராட்டி உள்ளது. இது தொடர்பாக தெலுங்கானா காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
டிஎஸ்பி முகமது சிராஜுக்கு வாழ்த்துகள். இங்கிலாந்துக்கு எதிராக வரலாற்றி வெற்றிபெற உதவிய அவரது சிறப்பான செயல்பாட்டுக்கு வாழ்த்துகள். தெலங்கானாவின் பெருமை. காவல்துறை, விளையாட்டு உடையில் அவர் ஹீரோ" எனக் குறிப்பிட்டுள்ளது. முகமது சிராஜ் தெலுங்கானா காவல்துறையில் டிஎஸ்பி பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.